லவ்வர் விமர்சனம்

 லவ்வர் விமர்சனம்

இயக்கம்: பிரபு ராம் வியாஸ்,

நடிகர்கள்: மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரீஷ் குமார்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்

கதைப்படி,

6 வருட காதலை சுமந்து கொண்டு பயணமாகிறது மணி கண்டன் மற்றும் ஸ்ரீ கெளரி ப்ரியாவின் வாழ்க்கை.

வாழ்க்கையில் இன்னும் பெரிதாக எந்த ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் ஒரு விதமான விரக்தியில் இருக்கும் மணிகண்டன், தனது மொத்த வலியையும் நாயகி ஸ்ரீ மீது வைக்கிறார்.

பல முறை சண்டையிட்டு, மன்னிப்பு கேட்டு மீண்டும் அவரோடு சேர்ந்து ஸ்ரீ’யோடு கொள்கிறார் மணிகண்டன். தொடர்ந்து இதே நடந்து கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் ஸ்ரீ தனது காதலை ப்ரேக்-அப் சொல்லி விடுகிறார்.

அதை தாங்கிக் கொள்ளாமல் தவிக்கிறார் மணிகண்டன். தொடர்ந்து ஸ்ரீ-யை சமாதப்படுத்த முயற்சிக்கிறார் மணிகண்டன்.

மன்னித்து மீண்டும் மணிகண்டனின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

குட் நைட் படத்திற்குப் பிறகு மணிகண்டன் நடிப்பில் உருவாகி வெளிவந்திருப்பதால், லவ்வர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

காதல், வலி, எமோஷன்ஸ், கண்ணீர், ஏக்கம் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு நிலைநிறுத்திவிட்டார் மணிகண்டன். வழக்கமான தனது ஏக்கமான முக பாவனையை வைத்துக் கொண்டு கேரக்டரை உள்வாங்கி நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் மணிகண்டன். ஒவ்வொரு இடத்திலும், தன்னால் என்ன இயலுமோ அதை தெளிவாகவும் அழகாகவும் செய்து முடித்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா ஒவ்வொரு காட்சிகளிலும் அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். திவ்யா என்ற கதாபாத்திரத்தோடு ஒன்றி, அக்கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் ஸ்ரீ. முக்கியமான இடத்தில் தனது வாழ்க்கையை நிர்ணயப்பதில் இருந்து, கண்ணீர், கவலை, காதல் என அனைத்து இடங்களிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த கண்ணா ரவியும் அளவோடு நடித்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். கீதா கைலாசம் அம்மாவாக நடித்து படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிகிறார்.

மனதில் ஏற்படும் எமோஷன்ஸை ஒரு மெல்லிய கோடு போல இந்த படத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர். காதல் என்றால் என்ன என்று தெரியாமலே காதலிக்கும் இளசுகளுக்கு இதுதாண்டா காதல் என்று அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் பிரபுராம்.

அதற்காக எப்போதும் குடி, புகை என்று பழக்கம் கொண்டு ஹீரோவை காட்டியிருப்பது சற்று படத்திற்கு சறுக்கல் தான். இந்த சமுதாயமும், இளைஞர்களும் இப்படிதான் இருக்கிறார்கள் என்று கூறுவது போன்று சித்தரிப்பது சற்று படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

காதலின் வலியை இன்னும் வேறு விதமாகவே, வேறு கோணத்திலோ காண்பித்திருக்கலாம் என்று தோன்றியது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது. ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகூற கொடுத்திருக்கிறது.

சண்டை, பிரிவு என தொடர்ந்து ஒரே காட்சிகள் படம் முழுக்க வருவது போர் அடிக்க வைத்தாலும், இரண்டாம் பாதி அடுத்ததளத்திற்குச் சென்று நம்மை வெகுவாக படத்திற்கு ஈர்த்திருப்பதால் லவ்வரை நாம் நிச்சயம் கொண்டாடலாம்.

லவ்வர் – காதலின் வலி.. –  3/5

Related post