நந்திவர்மன் விமர்சனம்
பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நந்திவர்மன்.
அனுமந்தபுரம் கிராமத்தில் தலைவராக இருக்கிறார் கஜராஜ். அந்த கிராமத்தில் மற்றும் அதனை சுற்றி இருக்கும் கிராமத்தில் இருக்கும் கோவில் சிலைகளை அழிந்து போகாமல் பேணி காத்து வருகிறார் கஜராஜ்.
தொல்லியல் துறையைச் சேர்ந்தவராக வருகிறார்கள் போஸ் வெங்கட் மற்றும் ஆஷா வெங்கடேஷ். அனுமந்தபுரத்தில் புதையல் ஒன்று இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு தொல்லியல் துறையினர் முகாமிடுகின்றனர்.
அந்த புதையலைத் தேடி அங்கு செல்லும் நபர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அதே ஏரியாவில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் சுரேஷ் ரவி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
கிராமத்தினரின் எதிர்ப்பை மீறி தொல்லியல் துறையினர் அந்த புதையலை கண்டுபிடித்தார்களா.?? மர்ம கொலைகளுக்கு காரணம் யார் .?? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தான் இரண்டாம் பாதி.
நாயகன் சுரேஷ் ரவி, இன்னும் பயிற்சி எடுத்து நடித்திருக்கலாம். மிகவும் ஆர்டிபிஷியலான நடிப்பைக் கொடுத்து காட்சியின் உயிரோட்டத்தை குறைத்து விடுகிறார். காதல் காட்சிகளில் ஓகேவாக நடித்திருக்கிறார்.
போஸ் வெங்கட் வழக்கம் போல், தனக்கு கொடுக்கப்பட்டதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். போஸ் வெங்கட் தமிழர்களின் பெருமையையும் சிலை பராமரிப்பைப் பற்றி பேசுவதையும் பாராட்டலாம்.
புதையல், சிலை, தொல்பொருள் என இந்த மூன்றை வைத்து தமிழ் சினிமாவில் நீங்க பார்த்த கதையே இதிலும் இருக்கிறது.
பெரிதான உயிரோட்டம் இல்லா திரைக்கதை தான் படத்தில் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம் யார் இந்த வேலையெல்லாம் செய்கிறார் என்று.
படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். – 2.5/5