தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய புரட்சி கலைஞர் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
அவரின் மறைவை கேட்டு தமிழகமே அதிர்ச்சிக்குள்ளானது. அவரின் இறுதி நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
அவரின் உடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கம் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளது.
அது,
1. மறைந்த திரு.’கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு ‘கேப்டன்’ விஜயகாந்த் சாலை அல்லது ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.
2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி ‘கேப்டன்’ விஜயகாந்த் விருது அல்லது ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .
3. மறைந்த திரு.’கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் ‘கேப்டன்’ விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.