நூடுல்ஸ் விமர்சனம்

இயக்கம் : அருவி மதன் தக்ஷிணாமூர்த்தி
நடிகர்கள்: ஹரீஷ் உத்தமன், எஸ் ஜே ஆழிவா, ஷீலா ராஜ்குமார், மதன், திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து.
இசை: ராபர்ட் சற்குணம்
ஒளிப்பதிவு: வினோத் ராஜா
கதைப்படி,
நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு குடியிருப்பில் இருக்கிறார்கள். அதே குடியிருப்பில் தான் ஹரீஷ் உத்தமன் மனைவி ஷீலா மற்றும் இவர்களது மகள் மூவரும் வசித்து வருகின்றனர். வாரம் ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து மொட்டை மாடியில் சிறிது நேரம் கலகலப்பாக பேசுவது வழக்கம்.
அப்படி பேசும் போது சத்தம் அதிகமாக இருக்கிறது என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இதை விசாரிக்க போலீஸ் அதிகாரி மதன், ஹரீஷ் உத்தமன் வீட்டிற்கு வருகிறார்.
அப்போது ஹரீஷ் உத்தமனுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட போலீசின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் ஹரீஷ். அதிகாலையில், தனது மகளின் கையில் இருந்த செல்போனை திருடன் ஒருவன் பறிக்க முற்படும்போது, அவனை ஷீலா ராஜ்குமார் வீட்டிற்குள் இழுத்து போடும் சமயத்தில், அந்த திருடன் இறந்துவிடுகிறான்.
இது ஒரு புறம் இருக்க காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பல வருடம் கழித்து தன் மகள் ஷீலாவை பார்க்க வருகிறார்கள் ஷீலாவின் பெற்றோர்கள்.
இந்த பிரச்சனையை போக்க, வக்கீல் ஒருவரை நாடுகிறார் ஹரீஷ். அங்கு இருக்கும் பிணத்தை அப்புறப்படுத்தும் நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்துவிடுகிறார்.
அப்புறம் என்ன அடுத்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை.
எப்போதுமே வில்லனாகவே பார்க்கப்பட்ட ஹரீஷ் உத்தமனுக்கு இப்படம் ஒரு மைல்கல் தான். பதட்டம், படபடப்பு, அடுத்து என்ன நடக்கப் போகிறது? தனது குடும்பத்துக்காக படும் பாடு என அனைத்தையும் கண்ணிலே நிலை நிறுத்தி தனது நடிப்பின் அரக்கனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ஹரீஷ் உத்தமன்.
ஓவர் ஆக்டிங்கிற்கு பெயர் போன ஷீலா ராஜ்குமார், இப்படத்தில் சற்று அளந்து நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மாவீரன் படம் வரையிலும், வில்லனாக பார்த்திருந்த மதனே இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கத்தில் முதல் படமாக இருந்தாலும், தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார் மதன்.
யதார்த்தமாக நடித்து உயிர் கொடுத்திருக்கிறார் திருநாவுக்கரசு. ஆழிவாவும் தன் பங்கிற்கு கொடுத்ததை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
ஆங்காங்கே சில தொய்வு எட்டிப் பார்த்தாலும், கடைசி அரை மணி நேரம் சீட்டின் நுணியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர்.
திரைக்குள் இருந்த ஒரு படபடப்பை படம் பார்ப்பவர்களிடமும் கடத்திச் சென்று விட்டார் இயக்குனர்.
ஒரு சிறிய வீட்டிற்குள் இப்படியெல்லாம் காட்சிகளை கொடுக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா.
பின்னணி இசை கதையோடு நாமும் பயணப்படும்படி வைத்திருந்தது மிகப்பெரும் பலம்.
நூடுல்ஸ் – ரசித்து சுவைக்கலாம்.. – 3.25/5