பிரேமலு – விமர்சனம் 3.5/5

 பிரேமலு – விமர்சனம் 3.5/5

இயக்கம்: கிரிஷ்

நடிகர்கள்: நஸ்லேன், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன்

இசை: விஷ்ணு விஜய்

ஒளிப்பதிவு: அஜ்மல் சபூ

தயாரிப்பாளர்கள்: பஹத் பாசில், திலேஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன்.

படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான இந்த பிரேமலு திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு இன்று முதல் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கதைப்படி,

கல்லூரி படித்து வரும் நாயகன் நஸ்லேன், சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். கல்லூரி காலம் முடிவடையும் நேரத்தில் அப்பெண்ணிடம் தனது காதலை கூறுகிறார் நஸ்லேன். அக்காதலை அப்பெண் நிராகரித்து விட, காதல் தோல்வியில் மனமுடைகிறார்.

அதன்பிறகு வெளிநாட்டிற்குச் செல்ல முற்படுகிறார். விசா கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு கோர்ஸ் படிக்க தனது நண்பனுடன் செல்கிறார். அங்குதான் நாயகி மமிதா பைஜுவை சந்திக்கிறார்.

எப்போது துறுதுறுவென தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் தான் மமிதா. அங்கு ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனக்கு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணம் மட்டுமே நடக்கும் என்று எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார் மமிதா.

மமிதாவை பார்த்ததுமே காதலில் விழுகிறார் நாயகன் நஸ்லேன். இந்த ஒருதலை காதலை எப்படி நஸ்லேன் இருதலை காதலாக மாற்றினார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் நஸ்லேன், சுட்டித்தனமான ஒரு நடிப்பைக் கொடுத்து படம் பார்ப்பவர்களை எளிதில் ஈர்த்திருக்கிறார். காட்சிகளில் அளவாக நடித்து எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை நச்’சென செய்து முடித்திருக்கிறார் நஸ்லேன். காதல் தோல்வியில் இருக்கும்போதாக இருக்கட்டும் ஒரு தலை காதலாக இருக்கட்டும், தனது நண்பனோடு அரட்டை அடிக்கும் போதாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ரசிக்க வைத்துவிட்டார் நஸ்லேன்.

நாயகி மமிதா படத்திற்கு மிகப்பெரும் பலம். க்யூட்டான எக்ஸ்ப்ரெஷனில் நம் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். இவர் செய்யும் சின்ன சின்ன சேஷ்டைகள் நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறது. சிறு வயது பருவத்தில் எப்படி ஜாலியாக இருக்க நினைக்கிறோமோ அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

நஸ்லேனின் நண்பனாக வரும் சங்கீத் பிரதாப், தோன்றும் இடங்களிலெல்லாம் சிரிப்பை வர வைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் நட்பு தான் எல்லாமே என்று கூறும் காட்சியில் கைதட்ட வைத்திருக்கிறார்.

காமெடியாக படம் ட்ராக் நகர்ந்து சென்றாலும், க்ளைமாக்ஸ் நெருங்க ஒரு ஃபீலிங்க்ஸை கொண்டு சேர்த்துவிட்டார் இயக்குனர்.

எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை சற்று கலைந்திருக்கலாம். மற்றபடி, குடும்பத்தோடு பார்க்கும்படியான ஒரு படைப்பாக தான் இப்படம் வெளிவந்திருக்கிறது.

சண்டைக் காட்சி இல்லாத, இரத்தம் இல்லாத ஒரு க்ளீன் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

பிரேமலு – கொண்டாட்டம்..

Related post