ரசவாதி – விமர்சனம் 3.5/5

 ரசவாதி – விமர்சனம் 3.5/5

யக்கம்: சாந்தகுமார்

நடிகர்கள்: அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு

இசை : தமன்

தயாரிப்பு: DNA Mechanic Company

தயாரிப்பாளர்: சாந்தகுமார்

கதைப்படி,

கொடைக்கானலில் சித்தா மருத்துவராக இருந்து வருகிறார் அர்ஜூன் தாஸ். பூச்சி முதல் இயற்கையை நேசிப்பவராக இருக்கிறார் அர்ஜூன் தாஸ். அதே ஊரில் இருக்கும் தனியார் ரெஸ்டாரண்டில் மேனஜர் பணிக்காக வருகிறார் தன்யா ரவிச்சந்திரன்.

இருவரும் சந்தித்துக் கொள்ள இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இந்த சூழலில், வில்லனாக வரும் சுஜித் சங்கர் கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணி உயர்வு பெற்று அங்கு வருகிறார்.

அர்ஜூன் தாஸ் – தன்யா இருவரும் காதலில் இருப்பதைக் கண்டு அவ்வப்போது தனக்குள்ளே ஒரு விதமான வெறி ஏற்றிக் கொள்கிறார்.

இந்த காதல் ஜோடியை பிரிக்க நினைக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரும் காரணம் ஒன்றும் இருக்கிறது. அந்த காரணம் என்ன.? எதற்காக அந்த ஜோடியை பிரிக்க நினைக்கிறார்.? அர்ஜூன் தாஸ் மனதிற்குள் இருக்கும் அந்த வலி என்ன.?? இதுவே படத்தின் மீதிக் கதை.

தனது நடிப்பாலும் குரலாலும் வழக்கம் போல் மிரட்டியிருக்கிறார் நாயகன் அர்ஜூன் தாஸ். பைட் காட்சிகள், காதல் காட்சிகள், எமோஷன்ஸ் என பல இடங்களில் அர்ஜூன் தாஸின் முத்திரை நடிப்பை நன்றாகவே காண முடிந்தது. இயற்கையை நேசிப்பவராக வந்து அவர் பேசும் வசனங்கள் பல இடங்களில் கைதட்டலை வாங்குகிறது.

தன்யா ரவிச்சந்திரனின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது. அழகு தேவதையாக காட்சிக்குகாட்சி தென்பட்டார்.

மற்றொரு கதாநாயகியாக தோன்றி படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாகவே பதிந்துவிட்டார் ரேஷ்மா வெங்கடேஷ். சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் ரேஷ்மா. அவரது நடனம், சின்ன சின்ன க்யூட்டான் எக்ஸ்ப்ரஷன் என அவரை ரசிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

அர்ஜூன் தாஸும் ரேஷ்மாவிற்கும் இடையேயான காதல் காட்சியை பின்னணி இசை மட்டுமே கொடுத்து நகர்த்தியிருந்தது கூடுதல் ரசனை.

வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்த கதாபாத்திரம் தான் சுஜித் ஷங்கர். கண்களால் அனைவரையும் பயமுறுத்தும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவருக்கான பின்னணி இசை பயமுறுத்தும் வகையில் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகபெரும் தூணாக வந்து நிற்கிறது. கொடைக்கானல் பகுதியில் இருக்கும் செடி, கொடி, ஏரி, மரங்களை இவ்வளவு அழகாக வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது. அவ்வளவு ரம்மியமான காட்சிகளை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தமனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு பலம். ஒவ்வொரு இடத்திலும் தமனின் இசை நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறது.

முதல் பாதி கதைக்குள் செல்லாமல் இருந்தது சற்று நெருடலாக இருந்தாலும், இரண்டாம் பாதி கதை முழுவதும் உள்வாங்கி சென்றது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.

இயற்கை, மண் அரசியல், வளம் என பலவற்றின் மேன்மையை ஆங்காங்கே கூறியதற்காக இயக்குனர் சாந்தகுமாருக்கு கூடுதல் பாராட்டுகள்..

ரசவாதி – சாந்தகுமாரின் ரசனை…

Related post