சொப்பன சுந்தரி விமர்சனம்

 சொப்பன சுந்தரி விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி மற்றும் சிலர் நடிப்பில், எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் உருவான படம் “சொப்பன சுந்தரி”.

எதை பேசுகிறது இப்படம்?

கவுண்டமணி, செந்தில் காமெடியில் வருவது போல், “சொப்பன சுந்தரிய யாரு வெச்சிருக்கா என்ற பஞ்சாயத்து இல்லாமல்”. அந்த காரை யாரு வச்சிருக்கா? என்ற ஒரு கான்செப்ட் தான் இந்த “சொப்பன சுந்தரி”.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் அக்கா செய்யும் ஒரு விபத்தின் சுவாரஸ்யத்தையும் இப்படம் பேசுகிறது.

கதைப்படி,

நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில், வெள்ளந்தி மனசு கொண்ட அம்மா (தீபா), குடித்து குடித்து பக்கவாதம் வந்துவீட்டில் இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா (லக்‌ஷ்மி ப்ரியா), குடும்பத்தை கவனிக்காமல் திருமணம் செய்து கொண்டு தனிகுடித்தனம் சென்று விட்ட அண்ணன் (கருணாகரன்) என பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பமாக இருக்கிறது.

ஐஸ்வர்யா வேலை பார்க்கும் நகைக்கடையில், கூப்பன் ஒன்றில் பரிசு விழுந்ததற்காக கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்திற்கு. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது அந்த குடும்பம்.

ஐஸ்வர்யாவின் அக்காவும், அவளின் காதலனும் அந்த காரை எடுத்துச்செல்ல ஒரு விபத்து ஏற்படுகிறது.

அக்காவின் திருமணத்தை இந்த காரை வைத்து முடித்துவிட திட்டமிடும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்த அடியாக, கருணாகரன் அந்த காரை தனக்கு சொந்தமாக்க கேட்டு வருகிறார்.

இதனால் இவர்களுக்குள் அடிதடி ஏற்பட, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது கார் விவகாரம். வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் சுனில். ஐஸ்வர்யாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் விசாரணையை வேறு போக்கில் கொண்டு செல்கிறார் சுனில்.

சுனிலிடம் இருந்து ஐஸ்வர்யா எப்படி தப்பித்தார்? லக்ஷ்மி ப்ரியா ஏற்படுத்திய விபத்து என்ன? கடைசில அந்த காரை யாரு வெச்சிருக்கா? என்பது படத்தின் இரண்டாம் பாதி.

நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவரின் நடிப்பும் வழக்கம் போல் பாராட்டை பெறுகிறது. நக்கலும், நையாண்டியும் அவருக்கு கூடுதலாக கை கொடுக்கிறது.

ஊமையாக நடித்திருக்கும் லக்ஷ்மி நல்ல நடிப்பை கொடுத்து கவனம் பெற்றிருக்கிறார்.

தீபாவின் வெள்ளந்தியான நடிப்பு, யதார்த்தமான பேச்சு, வசனம் என அனைத்தும் “டாக்டர்” படத்தில் பார்த்தது போல் இருந்தது.

ரெடின் கிங்ஸ்லி காமெடி செய்வதாக நினைத்து ஏதேதோ செய்கிறார். முகத்தை சுழித்துக் கொண்டு அவர் செய்யும் சேட்டைகளை ஒருமுறை ரசிக்கலாமே தவிர தொடர்ச்சியாக அது அவருக்கு செட்டாக வில்லை. ஆனாலும், போலீஸ் ஸ்டேஷன் சீனில் ஓரளவு ஸ்கொர் செய்துள்ளார்.

சுனில் ரெட்டி அவர்களை சமீபத்தில் காமெடியனாக பார்த்து விட்டு, இப்போது சீரியஸாக பார்த்தாலும் சிரிப்பு தான் வருகிறது.

எஸ் ஜி சார்லஸ் ஒரு கமெர்சியல் படத்தை கொடுக்க முயற்சித்து வெற்றியடைந்துள்ளார். முதல் பாதியில் காமெடிக்கான ஸ்பேஸ் நிறைய இருந்தும் அதை நிரப்பாமல் போனது சற்று ஏமாற்றம்.

ஆனால், இரண்டாம் பாதியில் வரும் பல ட்விஸ்டுகள் நம்மை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில், கோடை விடுமுறையில், குடும்பங்களுடன் கொண்டாட நினைத்தால் “சொப்பன சுந்தரி” படத்தை கண்டு மகிழலாம்.

சொப்பன சுந்தரி – என்றும் நினைவில்  – (3/5)

Related post