வான் மூன்று விமர்சனம்

 வான் மூன்று விமர்சனம்

முருகேஷ் இயக்கத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “வான் மூன்று”.

இம்மாதம் 11 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

கதைப்படி,

மூன்று தலைமுறை காதலைக் கொண்டுவந்துள்ளார் இயக்குனர்.

முதல் தலைமுறையாக டெல்லி கணேஷ் மற்றும் லீலா தாம்சன். வயதான தம்பதியராக இருக்கும், இவர்கள் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். லீலா தாம்சனிற்கு இதய பிரச்சனை.. ஆப்ரேஷன் செய்வதற்கு அதிகமாக பணம் வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார் டெல்லி கணேஷ்..

இரண்டாம் தலைமுறையாக, சாதி, மதத்தைக் கடந்து தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தனது காதலனான வினோத் கிஷனை திருமணம் செய்து கொள்கிறார் அபிராமி வெங்கடாசலம். ஒருநாள், அபிராமிக்கு மூளையில் பிரச்சனை இருப்பதாவும், அதிக நாட்கள் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூற உடைந்து போகின்றனர் இருவரும்..

மூன்றாம் தலைமுறையாக, காதல் தோல்வியால் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு அபிராமி. இருவருக்குமே வேறுவேறு காதல்..

சிகிச்சையில் இருக்கும் போது வாழ்க்கை என்னவென்று அறிந்து ஆதித்யாவும் அம்மு அபிராமியும் பழக ஆரம்பிக்கின்றனர்..

இந்த மூன்று தலைமுறையில் இருக்கும் காதல் என்ன..? அதன்பிறகு இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

அந்தந்த தலைமுறைகளில் காதல் எதுவரை செல்லும், எதுவரை இருக்கிறது என்பதை ஆழமாகவே இயக்குனர் கூறியிருக்கிறார்.,

அதிலும், ஆதித்யா பாஸ்கரிடம் காதல் என்பது என்ன என்பதை பெரியவர் ஒருவர் விளக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார். 60 வயதிற்கு மேல், உன் நினைவில் ஒருத்தி வருவாள் அவள் மட்டுமே உண்மையான காதலி என்று கூறும் சமயத்தில் அப்ளாஷ் பெறுகிறார்.

அபிராமி வெங்கடாசலம் மற்றும் வினோத் கிஷன்: ஆசையாக காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று எண்ணும் தருவாயில், மனைவிக்கு நோய் இருப்பது தெரிந்து அவருக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் கூடவே இருந்து செய்து உன்னில் நான் பாதிதான் என்று உணர வைக்கும் காதல் அந்த இடத்தில் ஆழமானது. மச்சி… மச்சி என்று இருவரும் சகஜமாக பேசிக் கொள்ளும் காட்சியில் யதார்த்த காதல் எட்டிப் பார்க்கிறது.

காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் காதலித்து, பின் காதலின் அர்த்தம் தெரிந்த பிறகு அதை அனுபவிக்க நினைக்கும் காதல் ஆதித்யா மற்றும் அம்மு அபிராமி இருவருக்குமானது. காட்சிகளில் ஆங்காங்கே சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், காதல் என்ற ஒன்றால் நிறைவாகிறது.

அனுபவ காதலாக, சுமார் 40 வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் மற்றும் லீலா தாம்சன் அதிகமாகவே கவனம் பெறுகின்றனர். தனது மனைவியைக் காப்பாற்ற போராடும் தருணத்தில் தனது அனுபவ நடிப்பைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் டெல்லி கணேஷ்.

ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவு கவனம் ஈர்த்துள்ளது. பெரிதான எந்த வித முயற்சியும் இல்லாமல், அளவாக கொடுத்து பாராட்டுகள் பெறுகிறார்.

R2 ப்ரோ’ஸ் இசையில் நீரோடையாக வந்து மனதை கவர்கிறது…

கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.. சற்று மெதுவாக செல்லும் திரைக்கதை நம்மை சோதனையாக்குகிறது.. இருந்தாலும் காதலுக்காக நாமும் படத்தை காதலிக்கலாம்..

வான் மூன்று – தலைமுறைகளின் காதல் வாழும் –  3/5

Related post