யானை முகத்தான் விமர்சனம்

 யானை முகத்தான் விமர்சனம்

யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் நடிப்பில், ரமேஷ் திலக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “யானை முகத்தான்”. ரெஜிஷ் மிதிலா இப்படத்தை இயக்கியுள்ளார்.

எதை பேசுகிறது இப்படம்?

கடவுளை எங்கும் தேட வேண்டியதில்லை, அவர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார் என்பதை தான் இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

தீவிர விநாயகர் பக்தரான ரமேஷ் திலக், பல பேரிடம் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல். அனைவரிடமும் பொய் பேசி, அவ்வப்போது வரும் பிரச்சனைகளை, நெகட்டிவ் சிந்தனைகளோடு விநாயகரிடம் வேண்டி வருகிறார்.

ஆனால், திடீரென ஒரு நாள் ரமேஷ் திலகின் கண்ணுக்கு மட்டும் விநாயகர் மறைந்து விடுகிறார்.

அதனால், மிகுந்த வேதனைக்கு ஆளாகிறார் ரமேஷ் திலக். காணாமல் போன விநாயகர் கிடைத்தாரா? ஒழுக்கமான ஒருவராக மாறினாரா ரமேஷ் திலக்? என்பது படத்தின் மீதிக்கதை.

முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளர் ரமேஷ் திலக். அவருக்கு வாழ்த்துக்கள். விநாயகரை தேடி அலையும் காட்சி, கிளைமாக்சில் வரும் காட்சி என, சில இடங்களில் நம்மை நெகிழ வைத்துள்ளார்.

4 நாள் கால் ஷீட் மட்டுமே கொடுத்து நடித்துள்ளார் போல யோகி பாபு. அவர் தான் விநாயகர். டீ கடையில் சிறுவனுடன் ஒரு 10 நிமிடம், ரமேஷ் திலக்குடன் 10 நிமிடம் என மொத்தமே 20 நிமிடம் தான் வருகிறார் யோகி பாபு.

ஊர்வசியும், கருணாகரனும் காமெடி காட்சிகளில் கொடுத்ததை செய்துள்ளனர்.

ஒரு கதையை, குறும்படமாக எடுக்க வேண்டுமா? இல்லை முழு நீள படமாக இருக்க வேண்டுமா? என்பதை இயக்குனர் முதலில் தீர்மானம் செய்ய வேண்டும். அதன் பின்னரே திரைக்கதை அமைக்க வேண்டும். ஆனால் அந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவை எடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர் ரெஜிஷ் மிதிலா.

அன்பே சிவம் படத்தின் ஒன்-லைன் தான் இப்படமும். ஆனால், அதை காமெடி ஜானரில் எடுக்க முயற்சித்துள்ளார். இதை ஒரு குறும்படமாக அமைத்திருந்தால் நிச்சயம் பாராட்டை பெற்றிருப்பார் இயக்குனர் ரெஜிஷ் மிதிலா.

பரத் ஷங்கரின் இசை மட்டுமே படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு திருப்தியை தரும்.

யானை முகத்தான் – நகைச்சுவைக்க முயற்சிதான்.

Related post