பம்பர் விமர்சனம்

 பம்பர் விமர்சனம்

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் ஹரீஷ்பெராடி, வெற்றி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி பி முத்து, தங்கதுரை, அருவி மதன், ஆதிரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “பம்பர்”.

கதைப்படி,

தூத்துக்குடியில் தனது நண்பர்கள் தங்கதுரை, திலீப் உள்ளிட்ட மூவருடன் திருட்டு அடாவடி என சுற்றித்திரிகிறார் வெற்றி.

மார்கெட்டில் கந்துவட்டி தொழில் நடத்தி வருபவர் ஜி பி முத்து. புதிதாக தூத்துக்குடியில் எஸ் பி’யாக பொறுப்பேற்கும் அருவி மதனின் கைகளில் சிக்காமல் இருக்க, கோவிலில் மறைந்து இருக்கும் வெற்றி உட்பட அவரது நண்பர்கள் நால்வரும் ஐயப்பனுக்காக மாலை அணிவித்துக் கொள்கின்றனர்.

இதற்காக, சபரிமலை செல்கின்றனர் நால்வரும். சபரிமலையில், லாட்டரி விற்று பிழைப்பு நடத்தி வரும் ஹரீஷ் பெராடியை காண்கிறார் வெற்றி. குடிப்பதற்காக தண்ணீர் கொடுத்ததற்காக ஹரீஷ் பெராடியிடம் ஒரு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கிக் கொள்கிறார் வெற்றி.

செல்லும் அவசரத்தில் லாட்டரியை, தான் இருந்த இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார் வெற்றி. வெற்றி விட்டுச் சென்ற அந்த லாட்டரி சீட்டினை ஹரீஷ் எடுத்து வைத்துக் கொள்கிறார்.

ஹரீஷ் எடுத்து வந்த அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பம்பர் அடித்துவிடுகிறது. அந்த சீட்டு தன்னிடம் தான் இருக்கிறது என்று தனது குடும்பத்தினரிடம் கூறுகிறார் ஹரீஷ். இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது ஹரீஷின் குடும்பம். இன்றோடு நம்முடைய ஏழ்மை வாழ்க்கை முடிய போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த குடும்பத்தினரிடம், ”இந்த லாட்டரியை வாங்கியது தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு தான் இது சொந்தமாகும்.. நாம் எடுத்துக் கொண்டால் அல்லா நம்மை மன்னிக்க மாட்டார்” என்று கூறி, குடும்பத்தினரை மீறி, வெற்றியைத் தேடி தூத்துக்குடிக்கு வருகிறார் ஹரீஷ்.

இறுதியாக வெற்றியைக் கண்டுபிடித்தாரா.? வெற்றியின் கைகளுக்கு அந்தபணம் வந்து சேர்ந்தது.? இதில் மனிதம் எங்கிருந்தது வந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஒட்டுமொத்த க்ரிடிட்டும் இயக்குனர் செல்வகுமாருக்கு சென்றடையும். தனித்துவமான கதையை கையில் எடுத்து, தனது அறிமுக படம் போல் இல்லாமல், காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்து கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் யூகிக்கமுடியாதபடி, தனது திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் செல்வகுமார். அதுமட்டுமல்லாமல், இதுவரை, தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் காண்பிக்காத தூத்துக்குடி மாவட்டத்தின் காட்சிகளை படத்தில் கொண்டு வந்து கண்களுக்கும் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல் ஹீரோ என்றே இவரை கூறலாம். அவர்தான் ஹரீஷ் பெராடி. இவரை பல படங்களில் வில்லனாக பார்த்திருப்போம். “என்னப்பா இவர பார்த்தா இவ்ளோ பாவமா இருக்கு” என்று சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு வயதான முஸ்லீம் நபர் எப்படி நடப்பார், எப்படி உரையாடுவார் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஹரீஷ்.

அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும் வசனமும், உணர்வு பூர்வமான நடிப்பும் எழுந்து நின்று கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு தனது உயிரோட்டமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஹரீஷ்.

படத்தில் முதல் பாதியில் ஆரம்பித்து படத்தின் க்ளைமாக்ஸ் வரும் வரை, ஒரு சாதாரண நபர் போல், ஹீரோவாக தெரியாமல் பணம் மட்டும் தான் அனைத்தும் என்று எண்ணிக் கொண்டிருந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் வெற்றி. தூத்துக்குடி வழக்காடு மொழியை பேசியிருக்கிறார்..

வழக்கமான நடிப்பு போல் இல்லாமல், இப்படத்தில் சற்று நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

க்ளாமர் புகைப்படங்களை சோஷீயல் மீடியாவில் பதிவேற்றம் செய்து வரும் ஷிவானி இப்படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

வெற்றியின் நண்பர்களாக வந்த தங்கதுரை, திலீப் உள்ளிட்டவர்களும் நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

படத்தின் பலமாக நம்மை கட்டிப்போட்டது ஒளிப்பதிவு. வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு அழகு.

கோவிந்த வசந்தாவின் பாடல்கள் கேட்கும் ரகம்.. பாடல்களின் வரிகள் ஒவ்வொன்றும் கவிதையாக வருடியது., பாடலாசிரியருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்..

மொத்தத்தில்

இந்த வருட சிறந்த 5 படங்களின் வரிசையில் ”பம்பர்” படமும் இணையும்..

பம்பர் – நேர்மையான மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய காவிய படைப்பு… – 3.5/5

Related post