ரெட் சண்டல் வுட் – விமர்சனம்

 ரெட் சண்டல் வுட் – விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: குரு ராமானுஜம்
இசை : சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா

நடிகர்கள்: வெற்றி, தியா மயூரிக்கா, கே ஜி எப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன்,  மாரிமுத்து, கபாலி விஷ்வந்த்,

கதைப்படி,

படித்த படிப்பிற்கு வேலை எதுவும் கிடைக்காத கபாலி விஷ்வந்த், யாரிடமும் கூறாமல் ஆந்திர காட்டிற்குள் சந்தன மரங்களை வெட்டும் வேலைக்கு சென்று விடுகிறார். அச்சமயம் பார்த்து, அவரின் தந்தையான மாரிமுத்துவிற்கு விபத்து ஏற்படுகிறது.

கபாலி விஷ்வந்தை அழைத்து வர, ஆந்திரா செல்கிறார் அவரது நண்பரான வெற்றி., அங்கு செல்லும் போது, கபாலி விஷ்வந்த் போலவே பலரும் அங்கு ஏமாற்றி மரம் வெட்ட அழைத்துவரப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது வெற்றிக்கு.

வெற்றியும் சந்தன மரத்தை கடத்த வந்திருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்ட ஆந்திர போலீஸ், அவரை கைது செய்கிறது.

மர கடத்தலில் மிகப்பெரும் ஜாம்பவனாக இருக்கும் கே ஜி எப் ராம், காவல்துறைக்குள்ளும் செல்வாக்கு வைத்திருக்கிறார்.

பிடிபட்ட அனைவரையும் என் கெளண்டவுரில் சுட்டுத் தள்ள சொல்கிறார் கே ஜி எப் ராம். இறுதியில், வெற்றி, கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட அனைவரும் தப்பித்தார்களா.? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைகளை சரியாக தேர்வு செய்து நடிப்பில் வல்லவர் வெற்றி. இப்படத்தின் கதையையும் அப்படியாக தேர்வு செய்திருக்கிறார். காட்சிகளில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தனது நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதி சற்று ஹீரோயிசமாக தெரிந்தது படத்திற்கு சற்று பின்னடைவு தான்..

கொஞ்ச நேரம் வந்தாலும் கொஞ்சலான நடிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார் நாயகி தியா மயூரிக்கா.

எம் எஸ் பாஸ்கர் தனது அனுபவ நடிப்பைத் தந்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்க் கொள்கிறார். தன் குடும்பத்திற்காக சட்ட விரோதமாக மரம் வெட்ட வந்ததாக சொல்லும் காட்சியில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். கபாலி விஷ்வாந்த், கணேஷ் வெங்கட் ராம், எம் எஸ் பாஸ்கரின் மகளாக நடித்தவர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் ஒரு தங்களுக்கு கொடுக்கப்பட்டதை மிக கச்சிதமாக கொடுத்து காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்திருக்கின்றனர்…

 சாம் சி எஸ் இசையில் பின்னணி இசை கதையோடு பயணமாகிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.. 

அதிலும், ஆந்திராவிற்குள் வெற்றியின் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது .

கதையின் போக்கு வலியைக் கொடுத்தாலும், தமிழர்களின் வாழ்வாதார வலியை இன்னும் வலியோடு பதிவு செய்திருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.

படம் தொடங்கியவுடன், கதைக்குள் சென்றது படத்திற்கு மிகப்பெரும் ஆறுதல்.. சந்தன மரம் வெட்டியதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வலியை இயக்குனர் தெளிவாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில்,

ரெட் சண்டல் வுட் – இதயத்தில் ரணத்தை ஏற்படுத்திவிட்டது… –  3/5

Related post