DD Returns விமர்சனம்

 DD Returns விமர்சனம்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “DD Returns”.

தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களும் ஹிட் அடித்ததால், தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கிறது இப்படம்.

கதைப்படி,

பாண்டிச்சேரியில் மிகப்பெரும் தாதாவாக வருகிறார் பெப்சி விஜயன். இவரின் மகனாக வருகிறார் ரெடின் கிங்க்ஸ்லி. இவருக்கும் சுரபியின் சகோதரிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.

பெப்சி விஜயனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சுரபி குடும்பம் இந்த திருமணத்திற்கு சமதிக்கிறது.. திருமணம் நடக்கும் சமயத்தில் பெண் ஓடி விட, அந்த இடத்தில் சுரபினை மணக்க முற்படுகிறார் ரெடின் கிங்க்ஸ்லி.

இதனால், அதிர்ச்சியடையும் சுரபியின் காதலனான சந்தானம், மாப்பிள்ளையை கடத்தி விடுகிறார். அதே சமயத்தில், பெப்சி விஜயனின் வீட்டில் இருக்கும் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துவிடுகிறது.

திருமணமும் நின்று விட, பணமும் திருடு போய்விட கடும் கோபத்திற்கே சென்று விடுகிறார் பெப்சி விஜயன்.

பணத்தை சந்தானம் தான் திருடியதாக எண்ணி அவரை தேடுகிறார் பெப்சி விஜயன். பணப் பையோ ஊரின் ஒதுக்குபுறத்தில் இருக்கக் கூடிய ஒரு காட்டுப் பங்களாவிற்கு மாட்டிக் கொள்கிறது.

பணப்பையை எடுப்பதற்காக அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள் சந்தானம் & கோ. அந்த வீட்டிற்குள் ஆங்கிலோ இந்தியன் குடும்பம் ஒன்று கேம் விளையாட்டு ஒன்றை நடத்தி கிராம மக்களால் அடித்துக் கொள்ளப்பட்டனர். அந்த குடும்பம் ஆவியாக அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.

சந்தானம் & டீம், மொட்டை ராஜேந்திரன் டீம், முனீஸ்காந்த் டீம், என ஒரு பட்டாளமே அந்த பணத்திற்காக அந்த பங்களாவிற்குள் மாட்டிக் கொள்கிறது.

பேயிடம் சிக்கிக் கொள்ளாமல் அந்த பங்களாவை விட்டு இந்த டீம் வெளியே வந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பித்த உடனே சந்தானத்தின் கெளண்டர் காமெடி சில்லரையாக சிதறுகிறது. மொட்டை ராஜேந்திரனில் ஆரம்பித்து தங்கதுரை, கிங்க்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சேது என அனைவரும் ரவுண்டு கட்டிக் கொண்டு காமெடியை கொடுத்திருக்கிறார்கள்.

இதுவரை வெளிவந்த இரண்டு பாகங்களைக் காட்டிலும் மூன்றாம் பாகமான இப்படம் ஒருபடி மேல் சென்று தான் நிற்கிறது என்றே கூறலாம்.

படம் ஆரம்பித்த முதல் இறுதிவரை சிரிப்பு சிரிப்பு என்ற ஒன்றை மட்டுமே கையில் எடுத்து படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இவர்கள் எடுத்த இந்த ஆயுதம் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

பாழடைந்து பங்களாவிற்குள் சென்றதும், காமெடி சும்மா சரவெடியாக பறக்கிறது. சந்தானத்திற்கு இப்படம் மிகப்பெரும் மைல்கல்லாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரமாக ஜொலித்திருக்கிறார்கள். கதை எல்லாம் வேண்டாம்ங்க, சிரிச்சா மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.

ஆஃப்ரோவின் இசையில் முதல் பாடல் ஆட்டம் போட வைத்துள்ளது. பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. தீபக்குமாரின் ஒளிப்பதிவு பிரமாண்டம். மோகனின் கலையை இப்படத்தில் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். காட்சிகளை கட்சிதமாக கொடுத்ததில் மோகனின் கைவண்ணம் கவனிக்க வைத்தது.

DD Returns – சிரிப்பலை..  – 3.5/5

Related post