கள்வன் விமர்சனம் – 2.5/5

 கள்வன் விமர்சனம் – 2.5/5

இயக்கம்: பி வி ஷங்கர்

நடிகர்கள்: ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா

ஒளிப்பதிவு: பி வி ஷங்கர்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

பின்னணி இசை: ரெவா

தயாரிப்பாளர்: டில்லி பாபு

தயாரிப்பு: ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி

கதைப்படி,

சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒரு காடு சார்ந்த கிராமத்தில் கதை நகர்கிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா இருவரும் கிராமத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

திருடிய பணத்தில் குடித்து கும்மாளம் போட்டு வருகின்றனர் இருவரும். பக்கத்து கிராமத்தில் திருட போன இடத்தில் இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ்.

கண்டதும் இவானா மீது காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். தொடர்ந்து இவானா பின்னால் சுற்றித் திரிகிறார். இவானாவின் மனதில் இடம் பிடிப்பதற்காக, முதியோர் இல்லத்தில் உறவினர் யாரும் இல்லாத பாரதிராஜாவை தத்தெடுத்து அவருக்கு உதவி செய்வது போல் நடிக்கிறார்.

செல்ல செல்ல பாரதிராஜாவை வைத்து வேறு ஒரு திட்டம் போடுகிறார் ஜி வி பிரகாஷ்.

ஜி வி பிரகாஷின் திட்டம் பழித்ததா.?? இவானாவுடனான காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனது தனித்திறமையை காட்டுபவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இப்படத்திலும், அதே போல் வியக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அசுர நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜி வி.

வழக்கமான நடிப்பையே கொடுத்திருக்கிறார் இவானா. கதையோடு ஒன்றிப்போன ஒரு ஈர்ப்பான நடிப்பை இப்படத்தில் இவர் கொடுக்காதது சற்று ஏமாற்றமே.

பாரதிராஜாவின் நடிப்பு மட்டுமே படத்தில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த வயதிலும் இப்படியொரு நடிப்பா என வியக்க வைக்கும் அளவிற்கு அனுபவ நடிப்பைக் கொடுத்து கைதட்டல் வாங்குகிறார் பாரதிராஜா.

கதையின் கரு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தாதல், கதைக்குள் நம்மால் பயணிக்க முடியாமல் போய் விடுகிறது.

படத்தின் முதல் பாதி வழக்கமான சினிமா பாணியில் கதை நகர்வதால், காட்சிக்கு காட்சி அலுப்பைக் கொடுக்கும் அளவிற்கு தான் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் பாதி எந்தவிதமான ஈர்ப்பையும் கொடுக்காததால், கதைக்குள் நாம் பயணிக்க மிகவும் சிரமப்பட வேண்டியதாகியுள்ளது. எப்பப்பா இந்த தீனா பேசாம இருப்பாருன்னு சொல்ற அளவிற்கு பேசிக் கொண்டே இருப்பது, எரிச்சலை வரவழைத்துவிட்டது.

கூற போனால், படத்தில் ஜி வி பிரகாஷை விட தீனாவிற்கு அதிக வசனங்கள் இருக்கிறது.

பின்னணி இசை படத்திற்கு ஈடு கொடுத்தாலும், பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை.

ஒளிப்பதிவு பெரும் பலம்.

கள்வன் – ஏமாற்றம்…

Related post