ஆலகாலம் விமர்சனம் – 3/5

 ஆலகாலம் விமர்சனம் – 3/5

அறிமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணமூர்த்தி நடித்து இயக்கி தயாரித்திருக்கும் படம் தான் இந்த ஆலகாலம்.

யார் வேண்டுமானாலும் நடித்து தயாரித்து இயக்கலாம். ஆனால், தான் இயக்கும் படைப்பானது தயாரிக்கும் படைப்பானது நடிக்கும் படைப்பானது சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ஜெய கிருஷ்ணமூர்த்தியின் படைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆலகாலம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

இப்படத்தில் நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தியே நடித்திருக்கிறார். உடன், ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவை சத்யராஜ் கவனித்திருக்கிறார். இசையை ரகுநந்தனும் படத்தொகுப்பை காசி விஸ்வநாதனும் செய்திருக்கிறார்கள்.

ஈஸ்வரின் ராவ்’ன் மகனாக வருகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி. கிராமத்தில் தனது மகனை பாசத்தோடு வளர்த்து வந்த தாய், கல்லூரி படிப்பிற்காக பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

கல்லூரி படிக்கும் போது, உடன் படித்த சாந்தினியுடன் காதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தாய்க்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று கூறி, தாயிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார் ஜெய்.

கல்லூரிக்குச் செல்ல முடியாமல், கூலி வேலைக்குச் சென்று தனது மனைவியை நன்கு கவனித்து வருகிறார் ஜெய். வேலை செய்யும் இடத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார் ஜெய்.

அதன்பிறகு ஜெய் வாழ்க்கை என்னவானது.? சாந்தினியின் குடும்ப வாழ்க்கை என்னவானது.?? மகன் சாதிப்பான், மிகப்பெரும் ஆளாக வருவான் என்ற கனவில் இருக்கும் ஈஸ்வரி ராவ் என்ன ஆனார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி, தானே இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கல்லூரி காலகட்ட வாழ்க்கையில் சற்று தடுமாறிய நடிப்பைக் கொடுத்திருந்தாலும் இரண்டாம் பாதியில் எழுந்து நின்று அனைவரும் கைதட்டும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து அசத்திவிட்டார் ஜெய கிருஷ்ணமூர்த்தி.

தமிழ் சினிமாவிற்கு டெடிகேஷன் நடிகர் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று உறுதிபட கூறலாம் என்றளவிற்கு நடிப்பில் அசுரத்தனத்தை காட்டியிருக்கிறார்.

உடன் நடித்த ஈஸ்வரி ராவ்’ன் கதாபாத்திரத்தையும் வெகுவாகவே பாராட்டலாம். தனது மகனின் நிலைமை இப்படியானதென்று ஏங்கி அழும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.

சாந்தினியின் நடிப்பும் கச்சிதம். தங்கதுரை, சிசர் மனோகர், தீபா உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் ரகுனந்தன்.

ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. எழுத்தில் இருப்பதை காட்சியாக படைப்பதில் ஒளிப்பதிவுக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இச்சமகால சமூகத்தில் இப்படியொரு படைப்பு நிச்சயம் தேவை என்றதொரு எண்ணத்தை கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் சல்யூட்.

தமிழகத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாகவும் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பாகவும் வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி..

ஆலகாலம் – தவிர்க்க முடியாத படைப்பு

Related post