கும்பாரி விமர்சனம்
இயக்கம்: கெவின் ஜோசப்
நடிகர்கள்: விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான்விஜய், மதுமிதா
ஒளிப்பதிவு: பிரசாத் ஆறுமுகம்
இசை: ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜெய்தன்
தயாரிப்பு: குமாரதாஸ்
கதைப்படி,
நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏறி, தனது ப்ளாஷ் பேக் கதையை கூற ஆரம்பிக்கிறார் விஜய் விஷ்வா. கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார் நலீப் ஜியா. கேபிள் ஆபரேட்டராக வேலை செய்கிறார் விஜய் விஷ்வா.
இருவரும் நல்ல நண்பர்கள். ஒருவரையொருவர் கும்பாரி என்றே அழைத்துக் கொள்வார்கள். கும்பாரி என்றால் நண்பன் என்று பொருள்படும்.
இதில் விஜய் விஷ்வாவிற்கும் நாயகியாக வரும் மஹானாவிற்கும் காதல் ஏற்பட, திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகின்றனர்.
திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார் மஹானாவின் சகோதரராக வரும் ஜான் விஜய். தனது நண்பனின் திருமணத்தை நடத்தியே தீருவதாக உறுதியாக இருக்கிறார் நலீப் ஜியா.
விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியாவை தீர்த்துகட்ட துடிக்கிறார் ஜான் விஜய். இந்நிலையில், விஜய் விஷ்வாவின் திருமணத்திற்கு செலவாகும் என்பதால் கடலில் மீன்பிடிக்கச் செல்கிறார் நலீப் ஜியா.
சென்ற இடத்தில் நலீப் ஜியா காணாமல் போகிறார். நலீப் ஜியாவை ஜான் விஜய் தான் கொன்று விட்டதாக கூறி, வழக்கு தொடுக்கிறார் விஜய் விஷ்வா.
பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை.
நாயகன் விஜய் விஷ்வா, அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன், காதல் காட்சி என அனைத்து ஏரியாவிலும் களம் இறங்கி அடித்திருக்கிறார். துடிதுடிப்பான இளைஞராக நடித்து காட்சிகளுக்கு கூடுதல் பலமாக நின்றிருக்கிறார்.
நண்பனாக வரும் நலீப் ஜியா, நண்பனுக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி இறங்கி வரும் காட்சிகளில், இப்படி ஒரு நண்பன் நமக்கும் வேண்டும் என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்திருக்கிறார்.
நாயகி மஹானா காட்சிகளுக்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சாம்ஸ் ஆங்காங்கே வரும் சிரிப்புக்கு கைகொடுத்திருக்கிறார்.
நட்பு தான் கதையின் மூலம் என்றால், அதை இன்னும் அழுத்தமாக கூறியிருந்திருக்கலாம். கதையின் மையக்கருவை தாண்டி கதை வேறு வேறு பக்கம் பயணப்பட்டு கதையின் சுவாரஸ்யத்தையே குறைத்துவிட்டது.
க்ளைமாக்ஸ் எவ்விதமான சுவாரஸ்யமும் இல்லாமல் முடிந்தது பெரும் ஏமாற்றம் தான்.
திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காமெடி, காதல் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன.
ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பாடல்கள் ஓகே ரகம் தான். – 2.5/5