சான்றிதழ் விமர்சனம்

 சான்றிதழ் விமர்சனம்

ஜெயச்சந்திரன் இயக்கத்தில் ஹரிகுமா, ரோஷன் பஷிர், ராதாரவி, அபுகான், ரவி மரியா, மனோபாலா, அருள் தாஸ், கெளசல்யா, ஆஷிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சான்றிதழ்”.

கதைப்படி,

திண்டுக்கல் மாவட்டத்தில் கருவறை என்ற கிராமத்தில் இருக்கும் மக்கள் மிகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்து வருகிறார்கள். தங்களுக்கென கட்டுப்பாடுகள் வைத்து கிராமம் முழுவதும் கோட்டை சுவர் எழுப்பி ஒரு தனி ராஜாங்கம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் சிறந்த கிராமத்திற்கான விருது கருவறை கிராமத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த விருதை ஏற்க மறுக்கிறார்கள் கருவறை கிராம மக்கள். இதுகுறித்து அங்கு பேச வரும் அமைச்சர் ராதாரவியும் அவமதிக்கப்படுகிறார்.

இதனால், அந்த கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த பல வழிகளில் முற்படுகிறார் ராதாரவி….. ஒரு காலத்தில் பல கெட்ட விஷயங்களை செய்து வந்த இந்த கிராமம், எப்படி இப்படி ஒரு கிராமமாக மாறியது..? இந்த கிராமம் இப்படி மாறுவதற்கு காரணமாக இருந்த வெள்ளைச்சாமி யார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக வெள்ளைச்சாமியாக வந்து வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஹரிகுமார். ஒரு மனிதன் தன் ஒழுக்கமாக எப்படி வாழ வேண்டும், தன்னைப் போலவே தனது கிராமத்தையும் ஒழுக்கமாக எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு வெள்ளை குணம் கொண்டவராக வெள்ளைச்சாமி நடித்திருக்கிறார்.

முதல் பாதியில் கிராமம், காதல், காமெடி, என நகரும் கதையானது, கருவறை கிராமம் இப்படி ஒரு ஒழுக்கமாக மாறியதற்கு வெள்ளைச்சாமி மிக முக்கிய காரணம் என்று இரண்டாம் பாதியில் கூறியிருக்கிறார்கள்.

ரோஷன் பஷிர், ராதாரவி, அபுகான், ரவி மரியா, மனோபாலா, அருள் தாஸ், கெளசல்யா, ஆஷிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை நடித்து முடித்திருக்கிறார்கள்.

ரவி மரியா படம் முழுவதும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆதித்யா கதிரின் காமெடி முதல் பாதி முழுவதிலும் ரசிக்க வைத்திருக்கிறது.

ஒரு சில காட்சிகள் வந்தாலும், அழகால் கட்டிப் போட்டு விடுகிறார் ஆஷிகா. இரண்டாம் பாதியில் வில்லனாக வரும் கெளசல்யாவின் கணவர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு காமெடியாகவே இருந்தார். எந்த விதத்திலும் அவரை வில்லனாக பார்க்க முடியவில்லை..

6 மணிக்கு மேல் சீரியல் பார்க்கக் கூடாது, வெளியே சுற்றக் கூடாது, என பல கட்டுப்பாடுகளோடு ஒரு கிராமம் நிச்சயம் கனவில்கூட சாத்தியமில்லை என்றாலும், இருந்தா நல்லா இருக்குமே என்று கடந்து செல்ல தான் தோன்றியது.

ரவிமாரன் ஷிவனின் ஒளிப்பதிவில் குறைந்த செலவில் இப்படி ஒரு கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறார். பாய்ஜு ஜேக்கப்பின் இசையில் பின்னணி இசை கதையோடு நகர்ந்து செல்கிறது.

நல்லதொரு முயற்சி என்றாலும், அதை இன்னும் சரியாக செய்திருக்கலாம். குறைகள் சில தென்பட்டாலும், எடுத்த முயற்சிக்காக படக்குழுவினரை பாராட்டலாம்.

சான்றிதழ் – சரிபார்க்கப்பட்டிருக்கலாம்…- 2.5/5

Related post