தமிழ்க் குடிமகன் விமர்சனம்

 தமிழ்க் குடிமகன் விமர்சனம்

இயக்கம் & தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன்

நடிகர்கள்: சேரன், லால், ஸ்ரீ ப்ரியங்கா, வேலா ராமமூர்த்தி, எஸ் ஏ சந்திரசேகர், அருள்தாஸ், ரவிமரியா, ராஜேஷ்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: ராஜேஷ்

கிராமத்தில் காலம்காலமாக குடிமகனாக இருந்து வருகின்றனர் சேரன் குடும்பத்தினர். குடிமகன் என்றால், யாராவது இறந்துவிட்டால் இறுதிச் சடங்கு செய்து தருபவர்களை தான் குடிமகன் என்பர். (வெட்டியான் என்றும் கூறுவார்கள்)..

அதேபோல், படித்த படிப்பிற்கு வேலை பார்க்க ஆசைப்படுகிறார் சேரன். ஆனால், அங்கு இருக்கும் கிராமத்தினரோ அவரை ஏளனமாகவும் கீழ்த்தரமாகவும் பார்க்கின்றனர்.

வேண்டா வெறுப்பாக செய்து வந்த அந்த தொழிலை, இனி பார்க்க மாட்டேன் என்று முடிவெடுக்கிறார் சேரன்.

இந்த சூழலில் தான் ஊரில் மிகப்பெரும் செல்வந்தரான லால் அவர்களின் தந்தை இறந்துவிட, அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக சேரனை அழைக்கின்றனர் கிராமத்தினர்.

சேரன் வர மறுக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், சேரன் மீது கொண்ட பகையால் இறுதி சடங்கு செய்ய மற்றவர்களும் வர மறுக்கின்றனர்.

இதனால் கடும் கோபம் கொண்ட லால் என்ன செய்தார்.?? சேரனுக்கு என்ன நேர்ந்தது ..?? எப்படி இதை எதிர்க்கொண்டார் .??? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கேற்ற கதாபாத்திரமாக தனது நடிப்பின் உச்சத்தை கொடுத்திருக்கிறா சேரன். மனதிற்குள் இருக்கும் ஒரு பேரண்ட வலியை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பில் கதாபாத்திரமாக நிலைத்து நின்றிருக்கிறார் சேரன்.

எந்த அளவிற்கு துயரம் கொடுத்தாலும், தான் தன்னுடைய ஊரை விட்டு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் இடத்தில், அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சேரன்.

சேரனின் மனைவியாக ஸ்ரீ ப்ரியங்கா அழகாகவும், நடிப்பில் யதார்த்தத்தையும் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல் மிடுக்காக வந்து கதாபாத்திரத்திற்கு வீரம் சேர்த்திருக்கிறார் வேலா ராமமூர்த்தி..

உயர்ந்த சாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடிகர் அருள்தாஸ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். போலீஸ் உயரதிகாரியாக வந்து அலற வைத்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

தன் குடும்பத்திற்காக, இதை தான் செய்ய வேண்டும் என்று காலம் காலமாக செய்து வந்த தொழில் தான் நமக்கு வேண்டும் என்று எழுதப்படாத விதி போல் கடைபிடித்து வந்த கதாபாத்திரமாக சேரனின் தாயாராக தீப்ஷிகா கச்சிதம்.

எடுத்துக் கொண்ட கதையில் வலியையும் வேதனையையும் கொடுத்து அதற்கான தீர்வையும் கொடுத்து ஒரு புரட்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். இன்னார்தான் ஒரு தொழிலை செய்ய எந்த காலத்திலும் எவரும் நிர்பந்தம் செய்ய முடியாது என்பதை நெற்றியில் பொட்டு அடித்தாற்போல் அறைந்திருக்கிறார் இயக்குனர்.

கேரக்டர்களின் வண்ணத்தில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். சினிமாத்தனமான தோற்றத்தில் இல்லாமல், கதாபாத்திரங்களின் தோற்றமாக இருந்திருந்தால் இன்னும் சற்று கூடுதல் கவனம் ஈர்த்திருந்திருக்கும்.

சாம் சி எஸ் அவர்களின் இசையில் பின்னணி இசை மற்றும் தாயாரம்மா பாடல் தனித்துவமாக தெரிகிறது.

ராஜேஷின் ஒளிப்பதிவு மூலமாக கிராம உயிரோட்டங்களை நம்மில் கடத்திச் சென்றிருக்கிறார்.

திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்தால் தமிழ்க்குடிமகன் இன்னும் அதிகமாகவே விவாதப் பொருளாக ஆக்கப்பட்டிருக்கும்.

தமிழ்க்குடிமகன் – தமிழ் சினிமாவின் தனி முத்தி  – 3.5/5

Related post