கேப்டன் மில்லர் விமர்சனம்

 கேப்டன் மில்லர் விமர்சனம்

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

நடிகர்கள்: தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், ப்ரியங்கா மோகன், குமரவேல், நிவேதிதா சதீஷ், விஜி சந்திர சேகர், வினோத் கிஷன்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி

ஆர்ட் டைரக்டர்: ராமலிங்கம்

ஆக்‌ஷன்: திலீப் சுப்புராயன்

கதைப்படி,

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னாள் கதை நகர்கிறது. ஆங்கிலேயர்களுக்கு கீழ் ராஜாக்களும், ராஜாக்களுக்கு கீழ் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இருக்கிறார்.

அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் தனுஷ். கோவிலுக்குள் செல்ல முடியாத வலியில், பட்டாளத்தில் சேர்கிறார். அவரது அண்ணனான சிவராஜ்குமார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் செய்து வருகிறார்.

பட்டாளத்தில் சேர்ந்த தனுஷ், போராட்டம் செய்த தமிழர்களை அதிகாரிகளின் ஆணைக்கிணங்க சுட்டுத் தள்ளுகிறார். பின்னர் மனம் மாறி, பட்டாளத்தை விட்டு வெளியேறுகிறார்.

திருட்டு கூட்டம் ஒன்றில் சேர்கிறார். பின், ராஜாவின் கோவிலில் இருந்து தெய்வத்தை வலுக்கட்டாயமாக ஆங்கிலேயர்கள் தூக்கிச் செல்கின்றனர். அதை திருடி தரும்படி ராஜா, தனுஷிடம் கேட்கிறார்.

தனுஷ் அந்த தெய்வத்தை திருடி ஓடி விடுகிறார். ஆங்கிலேயர்கள் தனுஷின் கிராமத்தை சூறையாடுகின்றனர்.

இறுதியில் தனது கிராம மக்களுக்காக தனுஷ் வந்து நின்றாரா.?? அடிமைப்பட்ட தனது மக்களின் கனவு நனவானதா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நடிப்பின் அசுரன் என்றால் அது நான் தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் தனுஷ். பட்டாளத்தில் ஒரு விதமான தோற்றமும், கிராமத்தில் இருக்கும் போது ஒருவிதமான தோற்றமும், கேப்டன் மில்லராக மிரள வைக்கும் தோற்றமும் என படம் முழுக்க கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் தனுஷ்.

ஆக்‌ஷனிலும் சரி, எமோஷனிலும் சரி, தன் மக்களுக்காக பேசும் வசனங்களும் சரி நடிப்பின் அரக்கனாகவே வெளிப்பட்டிருக்கிறார்.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு சிவராஜ்குமார், மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் இவரது காட்சிக்கு திரையரங்கில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.

பிரியங்கா மோகன், தனது கதாபாத்திரத்தை அளவோடு அழகாக செய்து முடித்திருக்கிறார். சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பக்காவாக ஸ்கோர் செய்திருக்கின்றனர்.

குமரவேல் தான் ஒரு சீனியர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஆங்கிலேயர் காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் வலியும் வேதனையும் சொன்னதோடு மட்டுமல்லாமல், இன்றுவரை இருக்கும் கோவில் கருவறைக்குள் அனைவரும் சமம் என்ற சமத்துவ கருத்தையும் படத்திற்குள் புகுத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ராக்கி, சாணி காயிதம் படங்களுக்கும் மேலாக இப்படம் ஒரு மைல் ஸ்டோனாக இயக்குனருக்கு நிச்சயம் இருக்கும்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது ஜி வி பிரகாஷ் குமார் தான். பின்னணி இசையில் மிரட்டியெடுத்திருக்கிறார். கோரனார் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளில் புல்லரிக்க வைத்திருக்கிறது. எட்டிங்க் நறுக் என்று கட் செய்திருக்கிறார்.

மொத்தத்தில்,

கேப்டன் மில்லர் – பொங்கல் வின்னர். –  3.5/5

Related post