மாமன்னன்: விமர்சனமும் விவாதமும்

 மாமன்னன்: விமர்சனமும் விவாதமும்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி இரு தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “மாமன்னன்”.

இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விமர்சனமும் விவாதமும் பேசு பொருளாக ஆகியுள்ளது.

ஏன் ??

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த மாமன்னன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

தேவர் மகன் ஏற்டுத்திய தாக்கம், ஒரு பிரளயம் தான் மாமன்னனை நான் எடுக்கக் காரணம் என்று கூறியிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்நிகழ்வு நடந்த சில நாட்களில் மாரி செல்வராஜ் கூறிய வார்த்தை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. மாமன்னன் திரைப்படத்தை பலரும் தேவர் மகனோடு ஒப்பிட்டு, மாமன்னன் படத்தை திரையிட்டால் போராட்டம் செய்வோம் என்றெல்லாம் கொடி பிடிக்கத் துவங்கினர்.

என்ன மாதிரியான கதை, என்ன மாதிரியான கதைக்கள் என்பதையெல்லாம் அறியாமல் சிலர் இந்த அறிவிப்பை முன்பே கொடுத்துவிட்டனர்.

காரணம் “மாமன்னன்” என்ற தலைப்பே சிலருக்கு ஒரு ஆட்டத்தைக் கொடுத்திருக்கலாம்.

அதுவே இதற்கான காரணமாக இருக்கக் கூடும்.

படம் வெளியான பிறகு சிலர் இந்த காலத்தில் இப்படி ஒரு கதை தேவையா.? முன்னொரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்.? இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. அப்படியெல்லாம் யாரும் இப்போது இல்லை என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜாக்களின் கதைகளையும் போர் சண்டைகளையும் பெருமைகளையும் கூவி கூவிக் கொண்டாடும் சமூகமானது, 2000 ஆண்டுகளாக நடந்து வரும் வலியைக் கூறினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன்.?

இன்னும் பல கிராமங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
இப்போ யார் அப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பியவர்களுக்கு,

சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வேறு சமுதாயத்தினர் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஒட்டுமொத்த கிராமமே திரண்டு நின்றது, தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலந்தது, காதலித்ததற்காக தன் சமூக பெண்களையே கொல்வது என நாளுக்கு நாள் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வழக்கம் போல், நாளிதழை படிக்கும் போது பத்தோடு பதினொன்றாக அச்செய்திகளை எல்லாம் கடந்து சென்று விடுகிறோம். இப்படியான ஒரு காவியம் அதை எடுத்து சத்தமாக கூறினால், அதனை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பொதுவாக இதுவும் ஒரு சாதிப் படம் என்று கூறி கடந்து சென்றுவிடுகிறார்கள். சாதியின் பெருமையை பேசுவது சாதிப்படமாகலாம்… சாதியின் வலியை கூறுவதே இங்கு சமூகப் படமாக இருக்கிறது.. அது நிற்கவும் செய்கிறது. ஜெயிக்கவும் செய்கிறது.

மாமன்னனின் வலிகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கினால் இன்னமும் பல எரிச்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கப்போகிறது.

காலம் உள்ளவரை இம்மாதிரியான “மாமன்னன்” வந்துகொண்டே இருப்பான்… பல அநீதிகளுக்கு நியாயம் கேட்டுக் கொண்டே இருப்பான்.

மாமன்னன் – மன்னாதி மன்னன்…

– மு சதீஷ் முத்து

Related post