மாமன்னன் படத்தை திரையிட்டால் கலவரம் ஏற்படும் – தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு!!

 மாமன்னன் படத்தை திரையிட்டால் கலவரம் ஏற்படும் – தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு!!

‘மாமன்னன்’ படத்தை தென் மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ‘மாமன்னன்’ படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கோரி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், சென்னையில் நடைபெற்ற ‘மாமன்னன்’ பட இசைவெளியீட்டு விழாவின் போது, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், 1992-ம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் தாக்கத்தால் தான் ‘மாமன்னன்’ படம் எடுத்தாக தெரிவித்தார். அதில் உள்ள இசக்கி கதாபாத்திரம் தான் இந்த படத்தின் வடிவேல் கதாபாத்திரம் என்றும் பேசியுள்ளார். ‘தேவர் மகன்’ வெளியான காலக்கட்டத்தில் அந்த படத்தை வைத்து சிலர் தென்மாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தியதாகவும், ‘மாமன்னன்’ இசைவெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசிய இந்த கருத்தும் அதுபோல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘மாமன்னன்’ எனும் பட்டம் ராஜராஜ சோழன், பூலித்தேவர், மருது பாண்டியர்கள் ஆகியோருக்கு உரித்தானது, அதை படத்தின் தலைப்பாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் போஸ்டரில் நாய், பன்றியை வைத்து மாமன்னர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாரி செல்வராஜின் பேச்சும், இப்படத்தின் தலைப்பும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக உள்ளதால் இந்த படத்தை தென்மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும். இல்லையெனில் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தங்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் வீரா கூறுகையில், ” இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிடும் சமூகத்தினர் இன்று பல்வேறு அரசு அமைப்புகளில் வேலை செய்து வருவதுடன், பலர் நல்ல நிலைமையில் இருப்பதால் தற்போது இது போன்ற படங்கள் எடுப்பதை தவிர்க்கவேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் பொதுவான அமைச்சர். அவர் இது போன்ற படங்களில் நடிப்பதை தவிர்ப்பதுடன் வரும் காலங்களில் சமுதாய சிந்தனை உள்ள படங்களில் நடிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

Related post