மூன்றாம் மனிதன் விமர்சனம்
இயக்கம்: ராம் தேவ்
நடிகர்கள்: கே பாக்யராஜ், சோனியா அகர்வால், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சிவகுமார், ராஜகோபா, மதுரை ஞானம்.
கதைப்படி,
மனித உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆங்காங்கே கிடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டராக வரும் பாக்யராஜ்.
இறந்தது ஒரு போலீஸ் அதிகாரி என கண்டுபிடித்த பாக்யராஜ், இறந்தவரின் மனைவியாக வரும் சோனியா அகர்வாலிடம் இருந்து வழக்கு விசாரணையை துவங்குகிறார்.
எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ராம்தேவை அழைத்து விசாரிக்கிறார் பாக்யராஜ்.
ராம்தேவ் அவரது வாழ்க்கையை விவரிக்கிறார்.. தான் நன்றாக வாழ்ந்து வந்ததாகவும் மதுப்பழக்கம் ஏற்பட்டதால் அதனாலே தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும் பாக்யராஜிடம் கூறுகிறார். இறந்து போன போலீஸூக்கும் தனது மனைவிக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறுகிறார் ராம்தேவ்.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இறுதியில் அந்த கொலை யாரால் நடந்தது.? எதனால் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
மதுவால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான ராம் தேவ். அதற்காக அவரை வெகுவாக பாராட்டலாம்.
ராம்தேவ் மனைவியாக நடித்தவர் காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறார். கே பாக்யராஜ் மற்றும் சோனியா அகர்வாலின் நடிப்பு ஓகே ரகமாக கடந்து செல்ல வேண்டியுள்ளது.
வசனங்களை இன்னும் சற்று வலுவாகவே கொடுத்திருந்திருக்கலாம். சில ஆபாச வசனங்களை தவிர்த்திருந்திருக்கலாம்.
கதையின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை படைப்பாக கொடுக்கும்போது சற்று கவனமாகவும் மக்களிடத்தில் அவர்களின் மனதில் பதியும்படியாகவும் இருந்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு மற்றும் இசை ஓகே ரகமாக இருக்கிறது.
மூன்றாம் மனிதன் – கவனம் தேவை… – 2.25/5