தீராக்காதல் விமர்சனம்

 தீராக்காதல் விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, வ்ரிதி விஷால், அம்ஜத் கான், அப்துல் லீ நடிப்பில், ஜி.ஆர்.சுந்தர்நாத் எழுத்தில், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் படம் “தீராக் காதல்”.

எதை பேசுகிறது இப்படம்?

கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கும் எக்ஸ்-லவ்வர்களுக்கு இடையேயான ஒரு உறவையும், அவர்களின் வாழ்க்கை போக்கையும், சில பாதிப்புகளையும் யதார்த்தமாக பேச முயற்சித்திருக்கும் படம் இது.

கதைப்படி,

பல வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த ஜோடி தான் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர்கள் பிரிந்த பின், ஷிவதாவை திருமணம் செய்துகொண்டு வ்ரிதி என்று குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ஜெய்.

வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை(அம்ஜத்) திருமணம்
செய்துகொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நிம்மதியில்லா ஒரு வாழ்க்கை தான்.

வேலை விஷயமாக மங்களூர் செல்லும் இருவரும். எதிர்பாராத விதமாக பாலக்காடு ரயில் நிலையத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஜெய்யும் சந்தித்துக்கொள்ள சில நாட்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள்.

அதன் பின், தனது குடும்ப வாழ்க்கையை புரிந்து கொள்ளும் ஜெய். ஐஸ்வர்யா ராஜேஷை அவாய்ட் செய்கிறார்.

ஆனால், தனது கணவன் அம்ஜத்தை பிரியும் ஐஸ்வர்யா, ஷிவதாவை விட்டுவிட்டு தன்னுடன் வந்து வாழுமாறு ஜெய்யை கட்டாயப்படுத்துகிறார்.

செய்வதறியாது நிற்கும் ஜெய் என்ன செய்தார்? ஐஸ்வர்யா ராஜேஷ் நினைத்தது நடந்ததா? ஷிவதா மற்றும் வ்ரிதி என்ன ஆனார்கள்? என்பது படத்தின் மீதிக்கதை.

ஷிவதாவுக்கு கணவனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காதலனாகவும் நடித்திருக்கும் ஜெய் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வெற்றி நீண்ட இடைவேளைக்கு பின் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

குடும்ப தலைவியாக ஷிவாதாவின் நடிப்பும், பேச்சும் நம்மை கவர்ந்துவிடும்.

படம் முழுக்க பயணிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அன்பிற்காக அவர் எங்கும் காட்சி, கோபப்படும் காட்சி, ஜெய்யை வெறுப்பேற்றவும் அவரின் கவனத்தை ஈர்க்கவும் அவர் செய்யும் செயல் என அனைத்தையும் கச்சிதமாக செய்து. அந்த கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சில காட்சிகளில் மட்டுமே வரும் அம்ஜத் கான், கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

அப்துல் லீ கதாபாத்திரம், நம்முடன் எப்போதும் இருக்கும் ஒரு நண்பனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

பேச்சிலர் படத்தில் நமக்கு கொடுத்த அதே உணர்வை தருகிறது சித்து குமாரின் இசை.

முக்கோண காதலை அழகிய திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யத்திற்கும் என்டர்டெய்ன்மென்டுக்கும் பஞ்சமில்லாத ஒரு கதையை தேர்வு செய்து இயக்கியுள்ளார் ரோஹின்.

படத்தின் இரண்டாம் பாதி சற்று சறுக்கியிருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் எமோஷனை தூண்டிவிட்டு மீதியை மறக்கடித்துவிட்டார் இயக்குனர் ரோஹின்.

ரவி வர்மன் நீலமேகம் அவர்களின் ஒளிபதிவு, பல லாங் ஷாட்கள் அமைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

தீராக்காதல் – காதல் அழிவதில்லை – (3.25/5)

Related post