சந்திரமுகி 2 விமர்சனம்

 சந்திரமுகி 2 விமர்சனம்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்‌ஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார் மற்றும் ராவோ ரமேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. இப்படத்தை பி வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கதைப்படி,

தனது வீட்டில் தொடர்ந்து அசம்பாவிதங்களாக நடந்து கொண்டிருப்பதாக, தனது குருஜியின் ஆணைக்கிணங்க சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வருகின்றனர் ராதிகா குடும்பத்தினர்.

ராதிகாவின் மகள் வழி பேரக்குழந்தைகளுக்கு கார்டியனாக வருகிறார் லாரன்ஸ். குலதெய்வம் கோலுக்குப் அருகிலேயே மிகப்பெரும் வேட்டையன் அரண்மனை இருப்பதால் அனைவரும் அங்கே தங்கி விடுகின்றனர்.

இந்த அரண்மனையின் ஓனராக வருகிறார் வடிவேலு. குலதெய்வம் கோவிலை சுத்தம் செய்தால் சந்திரமுகி வெளியே வந்துவிடுவாள் என கூறுகின்றனர். என்ன நடந்தாலும், கோவிலை சரி செய்யாமல் நாங்கள் கிளம்ப மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் ராதிகா.

அதே சமயத்தில், அரண்மனைக்குள் இருக்கும் சந்திரமுகியை ஒருவர் கிளப்பி விட அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. வேட்டையனின் ஆட்டம் இருந்ததா இல்லையா.??

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன் உடல்மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றி அதற்கு மறு உருவம் கொடுப்பவர் ராகவா லாரன்ஸ். இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். இண்ட்ரோ சண்டைக் காட்சியைத் தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. இப்படியான எண்ட்ரீயை தவிர்த்து சாதரணமாகவே வந்து செல்லலாமே மாஸ்டர். இவ்வளவு பில்-டப் தேவையில்லாதது.

வடிவேலு – லாரன்ஸ் இருவருக்குமான காமெடி ட்ராக்குள் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு பல இடங்களில் ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார் குறிப்பாக குழந்தைகளை.

இரவு 2 மணிக்கு அரண்மனைக்குள் சத்தம் போட்டாலும் கலையாத மேக்-அப்போடு அனைவரும் எழுந்து வருவது சற்று காமெடியாக தான் இருக்கிறது.

சந்திரமுகி கதாபாத்திரத்தை கங்கனா தான் ஏற்று நடித்திருக்க வேண்டும் என்றில்லை, நம்ம ஊரிலேயே இவரை விட அழகான பரதம் ஆடக் கூடிய நடிகைகளை நடிக்க வைத்திருந்தால் இன்னும் பெட்டரான அவுட் கிடைத்திருந்திருக்கலாம்.

சந்திரமுகி முதல் பாகத்தில் உள்ளது போலவே தலையை வெட்டுவது, எண்ணையை ஊற்றி கொழுத்துவது சந்திரமுகி அரண்மனையை விட்டுச் செல்வது என ஏகத்துக்கும் காட்சிகள் அப்படியே இருக்கின்றன..

வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். தமிழ் படத்தில் தெலுங்கு பாடலின் வாசனை தான் அதிகம். பாடல்கள் ஒன்றும் விளங்கவுமில்லை. இன்னும் பெட்டராகவே கொடுத்திருந்திருக்கலாம்.

ஒளிப்பதிவு ஆறுதலாக தெரிகிறது. முதல் பாகத்தை ஒப்பீடு செய்யாமல் பார்த்தால் இரண்டாம் பாகம் காமெடியில் உங்களுக்கு ஆறுதல் தரலாம்.

சந்திரமுகி 2 – காமெடிக்கு விசிட் அடிக்கலா – 3.25/5

Related post