மார்க் ஆண்டனி விமர்சனம்

 மார்க் ஆண்டனி விமர்சனம்

இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர்கள் : விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்க்ஸ்லி, நிழல்கள் ரவி

இசை : ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்

கதைப்படி,

1975ல் நடக்கும் கதையாக நகர்கிறது. அந்த வருடத்தில் பிரபல விஞ்ஞானியான செல்வராகவன், டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த டெலிபோனை வைத்து இறந்த காலத்திற்கு மட்டுமே பேச முடியும்.

இந்த டெலிபோன் கண்டுபிடித்த சில மணித்துளிகளில் நடந்த கேங்க்ஸ்டர் மோதலில் செல்வராகவன் சுட்டுக் கொல்லப்படுகிறார். இவரது கண்டுபிடிப்பான டெலிபோன் இவரது காரிலேயே முடங்கி விடுகிறது.

வருடங்கள் உருண்டோட 1975ற்கு கதை செல்கிறது. மிகப்பெரும் டானாக வருகிறார் எஸ் ஜே சூர்யா(ஜாக்கி)… இவரது மகன் இளம் வயது எஸ் ஜே சூர்யா(மதன்). தனது நண்பனான ஆண்டனி(விஷால்)யை கொன்றவனைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஜாக்கி.

ஆண்டனியின் மகனான மார்க்(விஷால்), சின்ன வயதில் இருந்தே தன் கண்பார்வையில் ஒரு மெக்கானிக்காக வளர்த்து வருகிறார் ஜாக்கி. மார்க்கிற்கு எவ்வித சண்டையும் அடிதடியும் பிடிக்காது.

ஆண்டனி மிகப்பெரும் ரெளடி, பொறுக்கி என மார்க் நினைக்க, அதனாலேயே இறந்து போன தனது தந்தை ஆண்டனியை வெறுக்கிறார் மார்க்.

இந்த சூழலில் தான் டைம் டிராவல் டெலிபோன் மார்க்கின் கையில் சிக்குகிறது. அதில், கடந்த காலத்திற்கு பேசுகிறார். தனது அப்பாவான ஆண்டனியைப் பற்றி தெரிந்து கொள்கிறார் மார்க்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…,

அப்பா மகன் என இரண்டு கேரக்டரையும் ஏற்று நடித்திருக்கிறார் விஷால். அப்பாவாக வரும் விஷால் தாடியுடனும் மகனாக வரும் விஷால் தாடி இல்லாமல் பங்க் ஹேர்ஸ்டைலில் நல்லதொரு வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

அப்பாவாக வரும் விஷாலுக்கு மாஸ் காட்சிகள் அளவுக்கு அதிகமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். நடை, உடை, பேச்சு என அனைத்திலும் மாஸ் காட்சிகள் கொடுத்து விஷால் ரசிகர்களுக்கு ஒரு சரியான விருந்து படைத்துள்ளனர்.

அதேபோல் அப்பா மற்றும் மகன் இரண்டு கேரக்டரையும் தானே ஏற்று நடித்திருந்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. விஷாலுக்கு கொடுத்ததைப் போலவே எஸ் ஜே சூர்யாவிற்கு அதே அளவிற்கான மாஸ் காட்சிகளை அதிகமாகவே கொடுத்து அதிர வைத்திருக்கிறார் இயக்குனர். அதிலும், இரண்டாம் பாதியில் அப்பா, மகனுக்குள் நடக்கும் காட்சிகள் திரையரங்கையே அதகளமாக்கியிருக்கிறது.

சுனில் வழக்கமான தனது யுனிக் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சில்க் கதாபாத்திரம் வரும் போது திரையரங்கே ஆர்ப்பரிக்கும் அளவிற்கு விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்துள்ளது. ஒளிப்பதிவு மாயாஜாலம் காட்டியுள்ளது. செட் என்பது போல் இல்லாமல் நிஜத்தையே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முதல் பாதி ஏனோதானோவென்று செல்லும் வேலையில், இரண்டாம் பாதி பெரிதாகவே கைகொடுத்து காப்பாற்றியிருக்கிறது. என்னதான்பா சொல்ல வர்றீங்க என கேட்கும் நேரத்தில் தப்பித்துக் கொள்ளும்படியாக இரண்டாம் பாதியில் கொஞ்சம் அதகளம் செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

மொத்தத்தில் முதல் பாதி மூஞ்சை சுழிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சிரிப்பைக் கொடுத்து மன நிறைவாக வெளியே வர வைக்கிறார்கள்.

மார்க் ஆண்டனி – அப்பாக்கள் புள்ளைகளின் ஆட்டம் அதிரடி தான்… –  3/5

Spread the love

Related post